அவர் ஒரு சுமாரான நடிகர் அவ்வளவுதான். என் அறிவிக்கு எட்டிய வரை அவரால் மோகன் (என்று ஒரு நடிகர் இருக்கிறார்) அளவு கூட நடிக்க முடியாது என்பதுதான் என் கருத்து. அதே சமயம் அவரைப் போல ஸ்டைல் பண்ணுவதற்கு எத்தனை ஆயிரம் மோகன்கள் வந்தாலும் முடியாது. ஆனால் ஸ்டைல் மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்.
எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று இந்த உலகிற்கு நிரூபித்து உள்ளார். உதாரணத்திற்கு சில கீழே.
1. குறைந்த பட்சம் ஒரு தமிழனையாவது தலைவரின் அடுத்த படம் எப்போது என்று ஏங்க வைக்க முடியும்.
2. குறைந்த பட்சம் ஒரு டஜன் தமிழர்களையாவது தலையை அங்கிட்டும் இங்கிட்டும் செறைத்துக்கொண்டு நடுவில் மட்டும் V வடிவில் முடியை பப்பறக்க என்று பறக்க வைக்க செய்ய முடியும். கேட்டால் ரஜினி ஸ்டைல் என்று அவர்கள் பெருமை கொள்ளும் கண்றாவியையும் காண நேரிடும்.
3. ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் தன் படத்தின் முதல் நாளன்று திரும்பி பார்க்க வைக்க முடியும். திரும்பி பார்ப்பவனுக்கு சோத்துக்கு வழி இருக்கிறதோ இல்லையோ அது வேற கதை.
4. அவரைப் பற்றிய செய்தியை படிக்கும் உலகின் எந்த நாட்டுக்காரனையும் நன்றாக குழ்ப்பி வைக்க முடியும்.
5. தன்னை ஒரு ஆன்மிகவாதி என்று தமிழ்நாட்டை நம்ப வைக்க முடியும். (பாபா படம் வரும் வரையிலும்)
6. பேசுறதை எல்லாம் பேசி நல்லா கல்லா கட்டிட்டு கடைசில அது எவனோ எழுதிக்கொடுத்த டயலாக் நான் படத்திற்காக பேசினேன் என்று சொல்லிவிட்டு கூலாக அமேரிக்கா சென்று ஐஸ்வர்யாவுடன் டூயட் பாட முடியும். (கருமம்,.. அந்த பொண்ணு எத்தனையோ தடவை சொல்லிடுச்சு, என்னால ரஜினி கூடலாம் நடிக்க முடியாதுனு, ஆனா விட்டாரா நம்ம ஆளு. )
இவை எல்லாமே ஒரு சில துளிகள் தான்.
இப்பொழுது ஏன் இந்த கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்று கேட்கலாம். சொல்கிறேன்.
சமீபத்தில் அவருடைய பேட்டி (கேள்வி-பதில்) படிக்க நேர்ந்தது. அதில் ஏதோ ஒரு அரசியல் பற்றிய கேள்விக்கு அவர் சொன்ன பதில் "... கடவுள் சொன்னால் நாளைக்கே நான் தயார்!". இன்னும் எத்தனை நாளைக்குதான் இதையே சொல்வாரோ. ஆண்டவா. கடவுளுக்கே கோவம் வந்திருக்கும். என்ன செய்ய...
சரி, கடவுள் எப்படி வந்து சொல்வார். இந்த சினிமாத்தனமான கற்பனைகளை விட்டுவிட்டு யோசியுங்கள். அதாவது "புஸ் ..." நு புகையா வந்து அதுல இருந்து கடவுள் வெளில வந்து இவரிடம் சொல்வார் அல்லது நந்தனம் சிக்னல் ல ஒரு பிச்சைக்காரி வடிவில் வந்து சூசகமாக சொல்லிவிட்டு போவார் என்றோ நினைக்காதீர்கள்.
உண்மை என்ன தெரியுமா... இவர் கடவுள் பெயரை சொல்லி தப்பிக்கிறார் அல்லது தாமதப்படுத்துகிறார். என்றைக்காவது அரசியல் பற்றிய முடிவு வரும்பொழுது கடவுள் சொல்லிவிட்டார் என்று அப்போதும் ஒரு புருடா விடுவார். அதற்கு ஆன்மிக புத்தகம் ஏதாவது ஒன்றில் இருந்து இத்தனையாம் பக்கத்தில் இது இது சொல்லப்பட்டிருக்கிறது அதுபோல் தனக்கு நடந்தது, நான் யானை அல்ல குதிரை என்றும் சொல்வார்.
சரி இதெல்லாம் பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் சகஜம் என்று போய்விடலாம். சினிமாவிற்கே வருவோம். ஏய்... யாருப்பா அது அங்க கமலையும் ரஜினியையும் பத்தி பேசுறது. ஆ.. அதேதான் மேட்டர்.
கரக்ட்... ஏம்பா இந்த ரஜினியையும் கமலையும் கம்பேர் பண்றீங்க. (நான் கமல் ரசிகன் கிடையாது) கமல் ஒரு சுத்தமான அறிவு ஜீவி. மனசுக்கு பட்டதை குழப்பமில்லாமல் தெளிவாக சொல்லிவிடுவார். அரசியலுக்கு வருவீர்களா மாட்டீர்களா என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் "எனக்கு நடிக்க தெரியும், ஆனா அந்த அளவுக்கெல்லாம் நடிக்க தெரியாது..." என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு ஒருத்தன் கூட அவரிடம் போய் அரசியல் பற்றிய கேள்வியே கேட்கலை. ஆனால் ரஜினியின் நிலைமை என்ன. ?
கமல் சினிமாவை ஒரு வியாபாரம், பொழுதுபோக்குகும் அப்பாற்பட்டு அதனை கலையாக அல்லது வாழ்க்கையாக பார்த்தார். அவரது ஒவ்வொரு படமுமே வாழ்க்கையின் பிரதிபலிப்புத்தான். ரசிகனுக்கு பிடிக்கவில்லை என்று தனது என்று பாணியை மாற்றிக்கொள்ளவில்லை. ஏனெனில் ரசிகர்கள் ஒரு வித்தியாசமான பிறவிகள். (கவனிக்கவும் திரையரங்குக்கு வரும் அனைவருமே சினிமா ரசிகர்கள் கிடையாது. அவர்களில் கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள், சினிமா ரசிகர்கள், போழுதுபோக்கிகள், வெறும் பார்வையாளர்கள் என்று அனைத்து வகையினரும் உண்டு.) நான் இங்கு பார்வையாளர்களை பற்றி மட்டுமே பேசுகிறேன்.
ஆ... எங்கே விட்டோம். வித்தியாசமான பிறவிகள். அன்பே சிவம் படம் வெளிவந்த போதுதான் தூள் என்ற படமும் வந்தது. ஆனால் அன்பே சிவம் தோல்விப் படம். தூள் மாபெரும் வெற்றி. இரண்டு படங்களும் வந்து ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது 'பார்வையாளர்க' ளிடம் கேட்டால் அன்பே சிவம் புரியவில்லை என்றார்கள். ஆனால் இப்போது அதே 'பார்வையாளர்க' ளிடம் கேட்டால் அன்பே சிவம் சிறந்த படம் என்பார்கள். ஆனால் சினிமா ரசிகர்கள் அப்போதே அந்த படத்தை சிறந்த படம் என்று சொல்லி விட்டார்கள்.
ஆனால் ரஜினி படத்தைப்பற்றி 'பார்வையாளர்க' ளிடம் கேட்டால் எப்பொழுது கேட்டாலும் ரஜினி படம் சூப்பர் ('பாபா' வைத்தவிர. அது ஏன் என்று கூட சில அறிவாளிகளுக்குத் தெரியாது) என்றுதான் சொல்வார்கள். சினிமா ரசிகர்களிடம் கேட்டு பாருங்கள்...??!! ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதே!!! அது சினிமா ரசிகர்களின் எண்ணிக்கையை விட பார்வையாளர்களின் எண்ணிக்கையைத்தான் அதிகமாக வைத்திருக்கிறது.
இந்த கட்டுரையை ரஜினி ரசிகர்கள் யாரேனும் படித்து அவர்களுக்கு கோவம் வந்தால் அவர்கள் வெறும் அரைவேக்காடுகள். உள்ளதை உள்ள படியே ஏற்றுக்கொள்பவன் தான் உண்மையான ரசிகன். ரஜினி ரசிகன். சினிமா ரசிகன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment